நிறுவனர்:நிலாமகள். Powered by Blogger.

எனது சிறகசைப்பில் அலைப்புறும் காற்றில் இளைப்பாற வருக...

பெண் கவிஞர்களுக்கு ஒரு செய்தி...

Tuesday, 14 December 2010 15 கருத்துரைகள்
அன்புடைய பெண் கவிஞர்களே...
என்னுடைய மின்னஞ்சல் முகவரிக்கு  இரா.பிரேமா என்கிற பேராசிரியர் ஒரு மெயில் அனுப்பியிருந்தார். அது கீழ்வருமாறு;

காலங்களில் ‘அவர்' என் வசந்தம் (நிறைவு பகுதி)

13 கருத்துரைகள்
முதல் பாகத்தை படிக்க இங்கே க்ளிக் செய்யவும்- காலங்களில் ‘அவர்' என் வசந்தம் பாகம் 1

“எனக்கு கல்யாணம் செய்யும் போது 16-17வயசு. அபூர்வமான மனிதர் என் கணவர். சோர்வில்லாதவர். நகைச்சுவையாளர். யாரையும் கடிந்து பேசமாட்டார். எல்லாருக்கும் தன்னாலான நல்லதை செய்யப் பிரயாசைப்பட்டவர்.


ருசித்து சாப்பிடுவார். அசைவ பிரியாணியும், மீன் குழம்பும் ரொம்ப இஷ்டம். காபி ரொம்பப் பிரியம். கேட்கறப்போவெல்லாம் தரணும். ஆசிரியர் போராட்டத்துல கலந்துகிட்டப்ப சிறைக்குப் போய் வந்த பெறகு, ‘அங்க சாப்பாடெல்லாம் எப்படி'ன்னு கேட்டதுக்கு, ‘பிரமாதம், வீட்டைவிடக் காபி நல்லாவேயிருந்துச்சு'ன்னார். (சிரிப்பு)

கடைசியா உடம்பு முடியாமப் போனபோது கூட, ‘பத்தியமாச் சாப்பிட்டு 100

காலங்களில் ‘அவர்' என் வசந்தம்

Monday, 13 December 2010 2 கருத்துரைகள்

கவிஞர்.மீராவின் மனைவி இரா.சுசீலாவிடம் ஒரு நேர்காணல்...


     தமிழ்மொழி, பொதுவுடமை, சமுதாய சீர்திருத்தம், தொழிலாளர் முன்னேற்றம் இவற்றில் பாரதி, பாரதிதாசனையொத்த எழுச்சிக் கவிஞர் தமிழுலகில் ‘மீரா' என்றறியப்படும் மீ. ராசேந்திரன்! பாவேந்தர் பாரதிதாசன் ... என் குரு! மகாகவி பாரதி... என் தெய்வம்! என்று தன் ‘மீரா கவிதைகள்' நூல் முன்னுரையில் குறிப்பிடும் இவர், கவிஞர், கல்லூரி முதல்வர், தொழிற்சங்கவாதி; மொழிப்பற்றாளர்; பதிப்பாசிரியர்; வானம்பாடி இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவர்! ‘கவி'என்கிற கவிதை இதழ், ‘அன்னம்', ‘அன்னம் விடு தூது'என்ற இதழ்களின் ஆசிரியர்; பல பதிப்புகள் கண்ட ‘கனவுகள்+ கற்பனைகள்=காகிதங்கள்' ,'மூன்றும் ஆறும்', ‘ஊசிகள்' போன்ற நூல்களின் படைப்பாளி; மனிதாபிமானம் மிக்க ஒரு பகுத்தறிவுவாதி... எனப் பல்வேறு ஆளுமைத் திறமைகளைக் கொண்டவர். சிவகங்கைக்காரர்.

     கவிக்கோ அப்துல் ரஹ்மான், டி.எம். அப்துல் காதர், கவிஞர்கள் சிற்பி, இன்குலாப், நா.காமராசன், மேத்தா, வைரமுத்து,பாலா, தமிழன்பன்,

அசைதலின் பெரு வலி

Wednesday, 8 December 2010 11 கருத்துரைகள்
தோட்டத்தில்
கிளைபரப்பி நிற்கும்
மாமரப் பொந்தில்,
உச்சிப் பொழுதின்
வெம்மையடங்கக் கரையும்
ஒற்றைக் குயிலின் மென் சோகம்...

நடுநிசியில்
அழுகையோய்ந்து கிடக்கும்
சாவு வீட்டின்
ஒற்றை விசும்பலாய்
மனதைப் பிசைகிறது...

ஞாபக அடுக்குகளின்
அடியாழத்தில்
அமிழ்ந்து போன
பலப்பல துயரங்களை
அசைத்து அசைத்து
மேலெழுப்பப் போதுமானதாகிறது அது...

அசைவற்ற மர இலைகளில்
கசிந்து பரவுகிறதென்
வன் சோகம்.

கடும் வெயிலையும் தாங்கிப் பலனளிக்கும் திணைப் பயிர்கள்

Monday, 6 December 2010 3 கருத்துரைகள்
நிச்சயதார்த்தம்... 1938-ம் ஆண்டு ‘பூலச்சாப்' எனும் இதழில் தொடர்கதையாய் வந்து, நூல் வடிவமான நாவலிது. மும்பையிலும் அதைச் சார்ந்த செளராஷ்ட்டிர தேசத்துக் கிராமங்களிலும் வாழ்ந்து வந்த குஜராத்தி மக்களின் வாழ்வியல் புனைவு.


நம் இந்திய சமூகத்தில் மிக மிக இரக்கப்படத் தக்கவர்கள், தங்களது பெண்ணிற்கு திருமணம் செய்யக் காத்திருக்கும் தந்தைமார்களே.

பகிர்வு

Saturday, 4 December 2010 12 கருத்துரைகள்
 தினம்தோறும் பிச்சையில்
வயிறு கழுவும் வாழ்வு இவளுக்கு.
அடைமழையோ உடல் நோவோ ...
அத்தி பூத்தார்போல் பொங்கித் தின்பதுமுண்டு.

வெஞ்சனத்துக்கு குப்பைக் கீரையும்,
குழம்பு செலவுக்கு முந்தின நாள் வரும்படியும்,
'கோடி' வீட்டம்மாவின் இரக்கத்தில் கிடைத்த
இரண்டு பிடி நொய்யரிசியும்
இருக்கும் தெம்பில் இன்று
அடுப்பெரிக்க சுள்ளி பொறுக்கி
உலை ஏத்திட்டா பானையை...

ஒரு கொதியில் வெந்த     நொய்யரிசிச்  சோற்றை
நசுங்கிய வட்டிலில் பரப்பிவிட்டு
ஆவியடங்கக் காத்திருக்கும் ஆவலாதி வேளையில்

வந்து நின்ற பஸ்சிலிருந்து
"யக்கா... எப்படியிருக்கே..." என்ற கூவலோடு
இறங்கிய தங்கைக்காரி
பக்கத்தூருக் கோயில் வாசலில்
பிழைப்பு பார்க்கறவ...

உலைமூடியில் பகிர்ந்த சோற்றில் துவங்கியது
பயணிகள் நிழற் குடையில் குடி ஏறியவளின்
விருந்தோம்பல்...!

சுவாமியின் வாக்கு

Thursday, 2 December 2010 11 கருத்துரைகள்


1. மனிதனின் இலட்சியம் இன்பமல்ல... ஞானமடைதல்.

எந்த சூழலிலும் யாருடைய குணம் எப்போதும் உயர்ந்ததாகவே இருக்கிறதோ அவனே உண்மையில் சிறந்த மனிதன். நம் ஒவ்வொரு எண்ணத்திலும் நமது குணம் படிந்திருக்கிறது. தொடர்ந்த பழக்கங்கள் மட்டுமே குணத்தை மாற்றியமைக்க முடியும். குணத்தை உருவாக்குவதிலும் செப்பனிடுவதிலும் நன்மை தீமைகளுக்கு சம இடம் உண்டு.

பொக்கிஷமாய் ஒரு சித்திரம்

Tuesday, 23 November 2010 16 கருத்துரைகள்
    வந்ததும், சென்றதும்...
28.6.1916--23.11.1985
     எனது தலைஎழுத்தை உருவாக்கியவரின் கையெழுத்து இது. ஒரு சகாப்தமாய் வாழ்ந்தவரின் சித்திரமாய் என் பொக்கிஷ இருப்பு.
     தன் பெண்டு, தன் பிள்ளை, தன் சுகமே பிரதானம் என்று பெரும்பாலோர் வாழ்ந்திருக்க, ஊர் உலக நலனுக்கும் உழைத்துக்
களைத்த உத்தம வாழ்வை கண்டு வளர்ந்த எங்களுள்ளும் செழித்திருக்கிறது சமூகத்தின் மீதும் சக உயிர்கள் மீதும் நேசமிக்க காருண்யம்!
     அப்பா...! எங்களுள் நீங்கள் விதைத்துச் சென்ற நற்சிந்தனைகளும், நல்லொழுக்கமும் கிளைத்துப் பரவி எம் சந்ததிகளுக்கும் நிழலாய்... உங்கள் ஜீவ அணுக்கள் உட்பொதிந்து வளர்ந்து பிரகாசிக்கும் எங்கள் வாரிசுகளை ஆசீர்வதியுங்கள்!!

சாவே உனக்கொரு சாவு வாராதோ ...!

Wednesday, 17 November 2010 26 கருத்துரைகள்      மருமகளை தனது மூன்றாவது மகளாகவே பாவித்த இவர் எனது மாண்பு மிகு மாமனார்! பதின்ம வயதில் தந்தையைத் தக்க வைத்துக் கொள்ளாமல் யமனுக்கு வாரி வழங்கிய வள்ளல் நான்!! புதுப்பித்துக் கொண்டேன் இவரிடம் என் தந்தையின் மறு உருவை... ஈடில்லா பாசத்தை.... இறை மேல் எனக்கிருந்த புகார் மறைந்தது இவரால்.
     உழைப்பும் நேர்மையும் இவரது இரு கண்கள். சிக்கனமும் சேமிப்பும் இவருக்குக் கைவந்த கலை. பேச்சில் கோபமிருக்கும் சமயங்களில். தன் பேரன்பின் பெருவெளியால் அனைத்தையும் சமன் செய்திடும் சூத்திரம் கற்றவர்.இவரது பெருஞ்சினத்தின் ஆர்பாட்டங்களைப் பிறகு நினைத்து நினைத்துப் பேசிச் சிரிப்போம் நாங்கள். தானும் சேர்ந்து கொள்வார் சிரிப்பில். பேரப் பிள்ளைகளிடம் இவரது குழைவும் நெகிழ்வும் உறவுப் பிரசித்தம்.
     எங்கள் குழந்தைகளுக்கு தாத்தா பாசத்தைத் திகட்டத் திகட்ட ஊட்டியவர். அவர்களின் சந்தோஷத்துக்காக எதையும் செய்யக்கூடிய அலாதி அன்புக்காரர். அவர்களின் மகிழ்வை அள்ளியள்ளிப் பருகிய அந்தக் கண்கள் மட்டும் இன்னும் உயிர்த்திருக்கிறது எங்கோ...என்பது தான் ஆறுதலளிக்குமொரு விஷயம் எங்களுக்கு.
     கழியும் தினங்களில் சில தினங்கள் மறக்கவியலா வல்லமை பொருந்தியிருக்கும் நம் நினைவில்.
     இந்த நாள், எங்களின் துரதிருஷ்டத்தைப் பறை சாற்றும் நாள்.

1910-ம் , 2010-ம்

Sunday, 14 November 2010 12 கருத்துரைகள்
                 ஈடு இணையற்ற மாபெரும் கவிஞர் இரவீந்திரநாத் தாகூர்(1861), இறைத் தத்துவத்தின் மேன்மையை ஆராதனை செய்த கவிதாஞ்சலியாம் கீதாஞ்சலியை 1910-இல் வங்க மொழியில் வெளியிட்டு, 1912-ல் அதிலிருந்து 103 தத்துவங்களை ஆங்கில மொழிபெயர்ப்பாக அளித்தார். 1913-ல், ஆசியாவிலேயே முதன் முறையாக இலக்கியத்துக்கான நோபல் பரிசை இந்நூல் இவருக்குப் பெற்றுத் தந்தது.

இலகுவானதெல்லாம் இலேசானதல்ல...

Saturday, 13 November 2010 16 கருத்துரைகள்
இலக்கியக் கூட்டமொன்று...
சிறப்புப் பேச்சாளரின்
ஓங்கிய குரலில்
வெள்ளமெனப் பெருகியது தமிழமுது
கட்டுண்டது காற்றும்...
விட்டுவர ஆளற்ற
தம்பதியருடன் வந்த சிறுபிள்ளை
காற்றுக்கு மாற்றாய்

தாகூரின் மின்மினிகள் (Fire Flies)

Tuesday, 9 November 2010 10 கருத்துரைகள்
என் வாழ்வைக் கனிய வைத்தமைக்காக
நான் நன்றி சொன்னேன் மரத்திற்கு-
ஆனால்
என் வாழ்வை எப்போதும்

தீபாவளி நல்வாழ்த்துக்கள்

Friday, 5 November 2010 5 கருத்துரைகள்
அனைவருக்கும் என் இனிய தீபாளி ல்வாழ்த்துக்ள்

குழந்தைகள் உலகம்

Wednesday, 20 October 2010 23 கருத்துரைகள்
விடுமுறையைக் கழிக்க
உறவினருடன்
ஊருக்குக் கிளம்பும்
சேட்டைக்காரக் குழந்தையிடம்
எச்சரிக்கிறேன்...
“அங்கு யாரிடமும் சண்டை போடக்கூடாது”

தீவிர முகபாவனையுடன்

**வாழ்த்துக்கள்**

Tuesday, 19 October 2010 2 கருத்துரைகள்
http://www.bharathikumar.blogspot.com/
    நலமும் வளமும் நிலைபெற்று நீடு வாழ்க!!!
உடம்புக்குத்தான் வயசு

Saturday, 16 October 2010 13 கருத்துரைகள்

ஆமாம்.
எனக்கு வயதாகி விட்டது-
அதனாலென்ன...?!

எட்டும் தொலைவில் வடுமாங்காயென்றால்

குறுங்கவிதைகள்

Wednesday, 13 October 2010 8 கருத்துரைகள்
போகுமிடம்

பயணங்களில் பிரம்மிப்பூட்டும்
கட்டிடங்களின் கண்காட்சி!
ஆங்காங்கு அடக்கமாய்...
மயான கொட்டகைகள்.முருகனும் முத்தையா பிள்ளையும்

Sunday, 10 October 2010 12 கருத்துரைகள்
பட்டை பட்டையாயப் பழனி விபூதியை
நெற்றியில் பூசி நெஞ்சில் பூசி
செவியில் பூவைச் செறுகிப் பூசை
அறையை விட்டே அசைந்து வருகையில்
முத்தையா பிள்ளை ‘முருகா!' என்றார்.

உடனே அவர்முன் ஓடோடி வந்து
“என்ன எசமான் கூப்பிட்டீர்களா?”
என்று கேட்டான் ஏவ லாளன்;
முத்தையா பிள்ளையின் முகமோ சிவந்தது!
“விடியா மூஞ்சிப் பயலே! விடிந்ததும்

இது எப்படியிருக்கு...?!!!

Thursday, 7 October 2010 16 கருத்துரைகள்
      எங்க வீட்டுகிட்ட செல்வ வினாயகர் கோயிலும், பெருமாள் கோயிலும் ஒரே இடத்துல பக்கம் பக்கமாயிருக்கு. தினசரி கோயிலுக்கு வர்றவங்களும், நாள்-கிழமையில வந்து தரிசிக்கிறவங்களும், மழைக்கு ஒதுங்குறவங்களுமா எப்பவும் நடமாட்டம் இருந்து கிட்டே இருக்கும்.தொடர்பு எல்லைக்கு வெளியே...

Tuesday, 28 September 2010 29 கருத்துரைகள்
உன் ஊருக்கு அரை மணிக்கொரு பேருந்து...
உன் வீட்டில் ஆளுக்கொரு கைபேசி ...

கவிதையாவது கழுதையாவது

Monday, 27 September 2010 4 கருத்துரைகள்
 கலாசாரப் பொருளாதாரச் சீரழிவுகள் சாமான்யன் வாழ்வை அசாதாரணமாக்கி, சிரமத்துக்குள்ளாக்கி விட்ட காலம் இது. சாதியம், வறுமை, பொருளாதாரப் பாகுபாடு போன்றவை ஆவேசம் கிளப்பியபடி... கைக்கும் வாய்க்கும் எட்டாமல் கழுத்தை நெரிக்கும் வாழ்க்கைச் சுமையில் கவிதையாவது கழுதையாவது...

தும்பைப் பூ சட்டை

Saturday, 25 September 2010 6 கருத்துரைகள்
பனித்துளி தாங்கிய பூக்களைப் போல் காதல் தாங்கிய மனம் பேரழகாகிறது. அதனால்தானோ கவியெழுதப் பழகிய பெரும்பாலோர் தத்தமது அனுபவக் காதலை தொகுப்பாக்கத் தவறுவது இல்லை. அவரவர் கைப்பக்குவத்துக்குப் பிரத்யேக ருசி இருப்பதையும் மறுப்பதற்கில்லை. நமது இன்பங்களின் சாவியாகவும், சில துன்பங்களின் பூட்டாகவும் காதலே காரணமாவது வியப்புக்குரியது.

எல்லோருக்கும் உண்டு நல்ல காலம்

Monday, 20 September 2010 9 கருத்துரைகள்
பிரெஞ்ச் அரசின் இலக்கியத்துக்கான ‘ஷெவாலியே' விருதை 1998-ம் ஆண்டு பெற்ற சிறந்த மலையாளப் படைப்பாளி எம்.முகுந்தன். இவரது தேசிய சாகித்ய அகாடமி விருது பெற்ற ‘தெய்வத்திண்டெ விக்ருதிகள்' நாவலின் தமிழாக்கமே இப்புதினம்.

வெளியில் இல்லை மழை...

Monday, 13 September 2010 15 கருத்துரைகள்
கண்ணை அழுத்தும்
காலைத் தூக்கம்
கிளம்பும் பொழுதை
நெருக்கடி ஆக்க
சுடுசொல் கிளப்பும்
கண்ணில் மழையை...

பலநாள் பயின்றும்
பந்தயக் கோப்பையை
தோற்றவன் கண்களில்
கோடை மழை...
வென்றவன் கண்களில்
மகிழ்வெல்லாம் மழையாய்.

நெருங்கிய உறவோ
இனிய நட்போ
மரணம் தழுவிய தகவல் தெரிய
மழைபோல் கண்ணீர்
மனசை ஆற்றும்.

பிரமச்சரியம்
இல்லறம் தாண்டி
வானப் பிரஸ்தன் ஆகும் ஆவலில்
ஆன்மீகத் தேடலில் அமிழும் மனசில்
எல்லா உயிரிலும் இறை உண்டென்ற
உண்மைத் தூவாணம்
நம்மை மென்மையாய்
நனைக்கும் தருணம்
வெளியே இல்லை மழை...
மனவெளியில் நல்ல மழை!

‘ட்ரையாம் பக்'....

Sunday, 5 September 2010 14 கருத்துரைகள்
         எப்போதும் போல் எழுந்ததும் அடுக்களைப் பிரவேசம் எனக்கு. மாமரக் காற்று முகம் வருடியது சாளரம் வழியே... ஊறிக்கிடந்த ‘பத்துப்' பாத்திரங்களை ‘ஒருகை' (இரண்டு கைகளாலும் தான்) பார்த்தேன். தலைக்கு மேல் பலகையில் கவிழ்ந்து கிடந்தன உபயோகம் குறைந்த பித்தளை அண்டா குண்டான்கள். தோட்டத்து அணில்களின் தற்காலிகக் குடியிருப்புகள் அவை.  மகப்பேறுக்குத் தாய்வீடு போல.

        நானற்ற பொழுதுகளில் சர்வ சுதந்திரம் அவற்றுக்கு. நானிருக்கும் சமயங்களில் வாத்தியார் உள்ள வகுப்பறையாய் கப்சிப். தினம் குறிப்பிட்ட நேரங்களில் தனக்கும் குட்டிக்குமாய் உணவு தேடிக் கொள்ள தாய் அணில் வெளிச் செல்லும். கீச்சிட்டுக் குரல் கொடுக்கவும், மெதுவாக ஏறி இறங்கவும் கற்றுத் தேர்ந்தது நாளடைவில் குட்டி அணில். அம்மாக்காரி இல்லாத போது, பைய இறங்கி வந்து, என்னுடன் கதைத்துக் கொண்டும், ஒளிந்து விளையாடிக் கொண்டும் இருக்கத் தொடங்கியது. பாதுகாப்பான இடைவெளியில் எங்கள் நட்பு தொடர்ந்தது.


       இன்று தாமதமாக எழுந்ததில் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தேன். ஐந்தரைக்கு காபி+காலை சிற்றுண்டி கட்டிக் கொடுத்து இவரை வேலைக்கனுப்பணும். ஆறரை மணிக்குள் மகன் கிளம்பியாக வேண்டும். எட்டுக்கெல்லாம் மகளும் கிளம்பி விடுவாள். இவர்களிருவருக்கும் மதிய சாப்பாடும் சேர்த்து செய்யணும். இடைவெளியில் நானும் மாமியாரும் டீயும் குடித்து விடுவோம்.

         இவரும் மகனும் அடுத்தடுத்துக் கிளம்பிப் போயாச்சு. வழியனுப்பிக் கதவு மூடி, மகளின் மதிய சாப்பாட்டிற்கான மீத வேலைகளுக்காக மறுபடி நுழைந்தேன் அடுக்களையினுள்.

         கீச் கீச் என்றது அண்டாவின் மேல் ஏறி நின்று. அம்மாக்காரியும் போயாச்சு போல. ‘வா வா... எழுந்தாச்சா' என்றவாறு, மகளுக்குப் பிடித்தமான காயைக் கழுவி நறுக்கத் துவங்கினேன். ‘கீச் கீச்...' சப்தம் மீண்டும் கேட்க, அனிச்சையாகக் கண்கள் அண்டாவைத் துழாவியது. அணிலைக் காணோம்... சரிதான்... ஆட்டம் தொடங்கியாச்சு... சுற்றுமுற்றும் பார்க்கவும், என்னைத் தவிக்க விடாமல் அலமாரி மளிகை டப்பாக்களிடையே மூக்கை நீட்டி மறுபடி கத்தியது. ‘இறங்கிட்டியா...' கேட்டபடி குக்கரைத் திறந்து சாதத்தை பாத்திரம் மாற்றி ஆறவிட்டேன். பொரியல் இறக்கும் நேரம், மறுபடி சத்தம். இப்போது ஃப்ரிஜ் மேல் நின்று ஆட்டம். ஓட்டத்துக்கும் ஆட்டத்துக்கும் ஈடு கொடுத்துச் சுழன்றாடும் அதன் வாலின் வசீகரம், ‘வேலையெல்லாம் கிடக்கட்டும்... என்னை எடுத்துக் கொஞ்சமாட்டாயா' என்பது போலொரு அழகு.

         ஹ்ம்ம்...எட்டுமணிக்காரியிடம் யார் மாட்டி விழிப்பது... கவனத்தை வேலையில் செலுத்தினேன். சிறிது நேரம் சென்று எங்கிருக்கிறதென நோட்டம் விட்டேன். அருகாமை சுவரில் மாட்டியிருந்த மாமனார் படச் சட்டத்தில் தொங்கிய சந்தன மாலையில் இலாவகமாக தொற்றிக்கொண்டு அவரிடம் ஏதேதோ சம்பாஷிக்கத் தொடங்கியிருந்தது.

      ‘நான் ரெடிம்மா... சாப்பாடும், தலை சீவலும் தான் பாக்கி...' என்றவாறு உள்நுழைந்த மகள், மின் விசிறியைச் சுழல விட்டு சாப்பாட்டு மேசையிலமர்ந்தாள்.

        பாய்ந்து மின் விசிறி இயக்கத்தை நிறுத்தியபடி சொன்னேன். ‘குட்டி அணில் கீழே இறங்கியிருக்கு... மாட்டிடப் போகுது

        '‘இவ்வளவு நேரம் அது கூடத் தான் பேசிட்டிருந்தியா...?! குருவி, அணில், பாத்திர பண்டம்ன்னு விசித்திரமான நட்பு வட்டம்மா உன்னுது...' எழுந்து மறுபடி மின் விசிறியைப் போட்டாள்.

        ‘ஐய்யோ, இன்னைக்கு மட்டும் ஹாலில் போய் சாப்பிடேன்...' மாமனாருடன் குலாவிக்கொண்டிருந்த அதைத் திரும்பிப் பார்த்தபடியே கெஞ்சினேன்.

        ‘இன்னைக்குதான்... இதனால்தான்னு அதுக்கு விதியிருந்தா நம்மால மாத்திடவா முடியும்...' இயல்பாக எடுத்துப் பரிமாறிக் கொண்டு சாப்பிடத் துவங்கினாள்.

        சம்பந்தமில்லாத எந்த உயிரும் துச்சமாகி விடுகிறது மனித மனதுக்கு!

        அவள் சாப்பிடுவதற்குள், மதிய சாப்பாட்டுப் பையை தயார் செய்தேன். எட்டாக ஐந்து நிமிடங்களிருந்தன. அதற்குள் தலை வாரி விடலாம்... இது எங்கிருக்கிறதென ஆராய்ந்தேன். போட்டோவுக்குப் பின் நுழைந்து நகர்ந்து கொண்டிருந்தது.

         நீண்ட பின்னலை மடக்கிக் கட்டி ரிப்பனில் பூப் போடும் போது அடுக்களைப் பக்கம் ஓடியது மூஞ்சூறு. எங்கள் வீட்டு ரேஷன் கார்டில் இடம்பெறாத ஏராளமான உறுப்பினர்களுள் ஒன்று.

        (மற்றதெல்லாம் தெரியணுமா உங்களுக்கு... பிள்ளையார் எறும்பு, சிவப்பெறும்பு, கறுப்பெறும்பு, முசுடு வகையறா, பல்லி, கரப்பான் பூச்சி, பாச்சை, சமயங்களில் பூரான், மழைக்காலங்களில் மரவட்டை, அட்டை, கம்பளிப் பூச்சி, வண்டு வகையறா ஒரு ஐம்பது... மூச்சு வாங்குது, நிறுத்திக்கிறேன். கதையைப் பார்ப்போம்.)

       மூஞ்சூறு ஓடியதும் மாற்றி மாற்றி கீச் மூச் சப்தம். சரி... குட்டிப் பையன் பயந்துட்டான் மூஞ்சுறுவைப் பாத்துன்னு நெனைச்சுக்கிறேன்.

       ஷீவை மாட்டி, சைக்கிளை எடுத்து வெளியே வெச்சாச்சு. ‘லன்ச் பேக்... லன்ச் பேக்...' பறக்கிறாள் மகள். ‘தோ... தோ... ‘ஓடினேன் உள்ளே. அடுக்களை சாளரம் வழியே தாவியோடுகிறது சனியன் பிடிச்ச பூனை.

           ( எப்போதாவது வருமென்பதும், எனக்கு சுத்தமாக ஆகாதென்பதும் உறுப்பினர் லிஸ்டில் சேர்க்காத காரணம்)

          அந்த அவசரத்திலும் ச்சூ... ச்சூ என விரட்டுகிறேன். சுழன்று வளைந்து அதனுடன் ஓடும் வால் வெறுப்பேற்றுகிறது.

         தெரு வரை சென்று மகளை வழியனுப்பி விட்டுக் கதவு மூடி, அப்பாடா...இனி அணில் குட்டியுடன் கதைபேசிக் களைப்பாறலாமென ஆயாசத்தோடு உள்நுழைந்து, ‘அப்புறம்... சொல்லு...' என்றவாறு பாத்திரங்களை ஒழித்துப் போ...

        என்ன... பதிலில்லை...

         ‘ட்ரையாம் பக்...' (அதன் செல்லப் பெயர்) ‘ட்ரையாம் பக்'....

         திருட்டுப் பூனை... மூஞ்சுறுவுக்கு குறி வைத்து...

       திகைப்பும் துக்கமும் சுனாமியாய் எழுந்து என்னை அழுத்துகிறது. நினைவலைகள் ஈழப் போரில் பலியான ஒரு பாவமும் அறியாத செஞ்சோலைக் குழந்தைகளை மீடெடுக்கின்றன.
     
       கைமீறிப் போன பலத்துக்கும் தயாராய் விழியோரம் கட்டி நிற்கும் துளி ஈரம், மிச்ச மீதி மனிதத்தின் சிறு அடையாளமாய்...

     "வேறென்ன கிழிக்க முடியும்?" அறச்சீற்றம் எழும்பி எனது கையாலாகாதத்தனத்தின் மேல்  'பொத்' என விழுந்து மடிகிறது.

பருவம் தப்பிய மழை

Friday, 27 August 2010 9 கருத்துரைகள்

தட்டு முட்டுச் சாமானெல்லாம்

சொட்டும் மழை தேக்கி நிற்க
கொட்டும் விடா மழையால்
கூரை நைந்து கீழே விழ

ஒட்டுத்துணியும் விடாமல்
ஈரம் தேக்கிப் பூஞ்சை பூக்க
ஈர விறகால் புகை பெருக்கி
உலையரிசி வேகாதிருக்க

ஆடு மாடு கோழியெல்லாம்
அடைமழையால் விரைத்துக் கிடக்க
வயக்காட்டில் பயிர் அழுகி
குடியானவன் வயிரெரிக்க

வெடவெடக்கும் குளிர் குறைக்க
ஒரு டீ குடிக்கவும் சில்லறையற்ற
உழவனுக்கு யாரால் வரும்
நல்ல காலம் ?

மழை

Friday, 20 August 2010 6 கருத்துரைகள்

வாசலில் வந்த தூறல்
என்னை வா வா என்றது...

நீட்டிய கையில்
பொட்டென ஒரு துளி
படியிறங்கிய போது
கழுத்தில் கையில்...
சிலிர்த்துச் சிரித்தேன் மகிழ்வாய்...

தலையுயர்த்தி வாய் திறக்க
தாகமற்ற தொண்டையில்
துளிகளின் பரவசம்

வலுத்த மழையில்
நனைந்தன துணிகள்

கும்மாளமாய்க்
குதித்து ஆடினேன்
கப்பல் விடக் காகிதம் தேடினேன்

அடுப்படியிலிருந்து
அவசரமாய் வந்து
உலர்த்திய துணிகளை
உருவிய அம்மா

ஓட்டமாய் வந்து
போட்டாள் முதுகில் பலமாக

கப்பல் விடும் ஆசை கனவாகிட
விசும்பலில் வலி கரைத்தேன்

தலை துவட்டித் துணி மாற்றியபடி
விரல் பதிந்த என் முதுகு தடவி
அழுகிறாள் அம்மா மழை போல!

தாய்மை நனைந்த தருணங்கள்

Saturday, 14 August 2010 4 கருத்துரைகள்

பேருந்து வேகத்தில்
தூக்கத்தில் சாமியாடும் தோழனை
ஆதரவாய்த் தோளில் சாய்த்துக்கொள்ளும்
நண்பனின் பரிவில்...

மிதிவண்டி சக்கரத்தில்
முந்தானை மாட்டி
தடுமாறி விழுந்த பெண்ணுக்கு
பாதையோர குடிசைவாசி
மாற்றுத் துணி தந்து
துணிவூட்டி வீடனுப்பும்
பெருந்தன்மையில்...

பிதுங்கும் கூட்டத்தில்
சிணுங்கும் குழந்தையோடு
கால்மாற்றித் தவிக்கும் சபிரயாணிக்கு
எழுந்து இடமளிக்கும்
கிராமத்து ஆசாமிகளின்
இரக்க மனசில்...

தெருமுனையில் கிழிந்த பாயில்
கிடந்துழலும் தொழுநோயாளிக்கு
தன் சோற்றைப் பகிர்தளிக்கும்
சக பிச்சையாளனின் பாசத்தில்...

அம்மாவின் இடத்தை இட்டு நிரப்ப
எல்லோரும் அம்மாவாகின்ற
தாய்மை தெறிக்கும் தருணங்கள் உன்னதம்!

கடவுளும் காருண்யமும்

Sunday, 1 August 2010 9 கருத்துரைகள்

எரியும் ஊதுபத்திப் புகையில்

நெளிகிறது
பார்வையற்ற விற்பனையாளனின்
தீனக்குரல்

சூம்பிய ஒற்றைக் கையில்
மாட்டவியலா சூடத் தட்டை
கழுத்தில் மாட்டி விற்றுப் பிழைக்கும்
சிறுமியின் தன்மானத்தில்
ஒளிர்ந்து மினுக்குகிறது
தீப ஆராதனை

வெளியே பலருக்கு
உழைப்பே தெய்வம்...
உட்கார்ந்த வாக்கில்
உண்டி நிரப்பும் பூசாரிக்குப்
பிழைப்பே தெய்வம்!

எழுத்துக்காரத் தெரு

Wednesday, 21 July 2010 6 கருத்துரைகள்
வகைப்பாடு ; கவிதைத் தொகுப்பு


படைப்பு : தஞ்சாவூர்க் கவிராயர்

வெளியீடு : அனன்யா,8/37.B.A.Y.நகர்,புதுக்கோட்டை சாலை, தஞ்சாவூர்.

விலை : ரூ.60/-` கவிதைத் தொகுப்புகள் பெரும்பாலும் கவிஞரின் ஒட்டுமொத்தப் படைப்புகளையும் அச்சிலேற்றியதாயிருக்கும். வாசகப் பரப்பில் கொள்ளத் தக்கதாயும் தள்ளத் தக்கதாயும் கலந்திருக்கும். தொகுப்பின் மொத்தக் கவிதைகளும் ஆகச் சிறந்ததாய் அமைதல் அரிதினும் அரிதே. அப்படியான அரிய கவிதைத் தொகுப்பாயிருக்கிறது இக் கவிதை நூல்.

புரியாத மொழிநடை, பூடகமான தன்மை எனப் புதுக்கவிதைகளில் பெரும்பாலானவை புதிர்க் கவிதைகளாயிருக்கும் இன்றைய கவிச் சூழலில், தஞ்சாவூர்க் கவிராயர் என்றறியப் படும் தஞ்சாவூர்க் கோபாலியின் ‘எழுத்துக்காரத் தெரு' மாறுபட்ட கட்டமைப்பு.

இவரது கவிதைகள் புரிபட ‘இஸ'ங்கள் தெரிந்திருக்க வேண்டியதில்லை. இலக்கண இலக்கியப் புலமையும் அவசியமில்லை. இரசித்துச் சிரிக்கும்படியான நண்பரின் பேச்சு மனசில் நின்று விடுதல் போலிருக்கிறது இவரது கவிப்பேச்சு. பலகவிதைகள் படிமங்கள், உருவகங்கள், தொன்மச் செய்திகளுடன் உள்ளன.பாடுபொருளுக்காக மண்டையை உடைத்துக் கொள்ளாமல், கண்களில் தென்படுபவை, கடந்து செல்பவை, கைக்கெட்டுபவை கைவசப்பட இயல்பாய் யோசிப்பது இதமாய் இருக்கிறது.

கவிஞனாயிருத்தல் பற்றிய அனுபவக் கவிதைகள் நயமானவை. ரசமானவை.

வாழ்க்கை கொடைதான்... பலருக்கு வாழ்தலே வலியாகிறது. அடுத்தவர் வலி புரியும் போது தன் வலி பெரிதாய் உறைப்பதில்லை(வாழ்தலின் வலி).

தனது கவிதைகளால், உயிர்த்திருக்கும் ஒவ்வொரு கணமும் ஆடிப்பாடும் ஆனந்தக் கூத்தாக்கி விடுகிறார் வாழ்க்கையை.

தனது எழுத்துக்களுக்குத் தஞ்சைப் ப்ரகாஷின் தூண்டுதல், கனலும் அக்னித் துண்டாய் மனசின் அடியாழத்தில் இன்னுமிருப்பதாய் நெகிழ்வுடன் குறிக்கிறார் தன் முன்னுரையில்!

சிற்பமோ, கவிதையோ, ஓவியமோ... வாசிப்பதற்கானவையல்ல; வாழ்வதற்கானவை. நல்ல கவிதையின் வாசமென்பது குழந்தை மாதிரி... எப்போதும் வாரியெடுத்து உச்சி மோந்து கொண்டிருக்கலாமென இவர் கூறுவதை இத்தொகுப்புக்கு அணியாக்கலாம்.

ஆறமறுக்கும் புண்ணிலிருந்து

ரத்தமும் சீழும் வழிவதை

நிறுத்தும் வைத்தியமாகவும்

தொண்டையில் சிக்கிய

மீன் முள் வாழ்வை

விழுங்குவதற்கான

சோற்றுருண்டையாகவும்

ஆகியிருக்கின்றன இவரது கவிதைகள்.

தனது அன்புக்கும் மதிப்புக்கும் பாத்திரமான அப்பா பற்றிய ஒன்பது கவிதைகளும், அவற்றுக்கு இணையான அம்மா பற்றிய ஒரு கவிதையும் உணர்வுகளின் உச்சம். அம்மா அப்பா போல் எந்தக் கடவுள் நிகழ்த்த முடியும் அதிசய-அற்புதங்களை?! முதியோர் இல்லங்களை நிறைப்பவர்களின் குழந்தைகள் கூட ஏதேனும் ஓர் தருணத்தில் பெற்றோரின் கடவுள் தன்மையை உணரவும், உருகவும் வாய்ப்பிருக்கிறதே...! தாயும் தந்தையும் தான் தெய்வம் என்றிருந்தால் மதங்களின் பெயரால் மனிதருக்கு அழிவேது?

இவரது இதிகாச நையாண்டிக் கவிதை ஒன்றில் அயோத்தி கான்க்ரீட் நகராகிறது. நீலச் சாயம் பூசிய ராமர் வயிற்றுப் பாட்டுக்கு கையேந்தும் அவலத்தைத் தணிக்க பீடி பற்றவைத்துக் கொள்கிறார். வாலைத் தூக்கிக் கொண்டு முனிசிபாலிட்டி சாக்கடை தாண்டும் அனுமன், வயிற்றில் எரியும் லங்கா தகனம்(பசித் தீ) தணிக்கத் தேவையாகிறது ஒரு கோப்பைத் தேநீர். சீதையைக் காணோம். இருட்டுவதற்குள் வந்து விடுவாளென சமாதானமாகிறான் ராமன். இதிகாச வேடமிட்டு யாசித்து உயிர் வளர்க்கும் மக்களின் அவலத்தை, ஆவேசத்தை சிரித்தபடி, கிண்டலடித்தபடி அனாயசமாக கவிதையாக்க முடிந்திருக்கிறது இவரால்.

‘தெருவோரக் குழந்தைகள்

அனைத்தையும்

மத்திய மாநில அமைச்சர்கள்

தத்தெடுத்து

அரசு பங்களாக்களிலும்

விருந்தினர் மாளிகையிலும்

தங்க வைக்க வேண்டும்...'

--------

‘எத்தனை ரத்தக் கறைகள் பார்த்தாயா

எமது வீதிகளில்

பெரும்பாலும்

குழந்தைகள், அபலைகள்

அப்பாவி மனிதர்களுடையவை...'

--------

‘ ‘பட்டினியாலும் வலியாலும்

தவிக்கும் உலகத்து ஜீவராசிகள்

எல்லாவற்றையும்

மடியேந்திப் பசி தீர்க்கும்

ஆவேசத்தோடு பொங்குகிறேன் பாற்கடலாக...'

--------

புலன்களால் நுகரப்படும், புத்தியால் அறியப்படும் ரசனைமிகு கவிதைகளினூடே அவரது சமூக அக்கறையும் இவ்வாறாகக் காணக் கிடக்கிறது.

‘தஞ்சாவூர்க் கவிராயர்' என்றொரு காலாண்டிதழ் நடத்திவருகிறார். தனது கவிதைகள் நிரம்பியதாய்.

எதையும் கவிதையாக்கும் நுட்பம் பெற்ற இவர், தனது தொகுப்பில் ஒரு கவிதையில் கூறியது போன்று, கவிதைக் கடை துவங்கி, மலிவுப் பதிப்பில் உலகில் ஒருவர் விடாமல் தன் கவிதைகளைக் கொண்டு சேர்ப்பார் என்ற நம்பிக்கை துளிர்க்கிறது நமக்கு.

மகிழ்தலும் மகிழ்வித்தலும்

Thursday, 15 July 2010 9 கருத்துரைகள்
பண்டிகைகளும் கொண்டாட்டங்களும், விருந்துகளும் கேளிக்கைகளும் நம் சலிப்பூட்டும் தினசரி நடவடிக்கைகளின் மாற்றாக நம்மிடையே அமைந்துள்ளன.

மகிழ்தலும் மகிழ்வித்தலுமே கொண்டாட்டங்களின் அடிப்படை. சமீப காலமாக புத்தாண்டு, தீபாவளி, பிறந்தநாள் கொண்டாட்டங்கள், தேர்தலில் வெற்றியடைந்த கட்சிக் கொண்டாட்டங்கள் போல மனம் போனவாறு ஆடம்பர ஆர்பாட்டங்களோடு, அடுத்தவர்களின் அவஸ்தைகளை பொருட்படுத்தாது, யாருக்கும் எந்தப் பயனுமின்றி, வெற்றுப் பொழுது போக்காக விரய செலவாக கொண்டாடப்படுகின்றன.

இந்தப் போக்கைக் கைவிட்டு, நம்மிலும் எளியோர் வறியோர்க்கு நம்மால் இயன்ற உதவிகளைச் செய்வதாய் நம் கொண்டாட்டங்களின் செலவுதிட்டத்தை அமைத்துக் கொண்டால் நன்று.

உபதேசிக்கும் முன் உதாரணமாய் வாழ்தல் அவசியம் அல்லவா... எங்கள் குடும்ப உறுப்பினர்களின் பிறந்தநாள். திருமண நாள், நினைவு நாள் போன்ற நாட்களில் தொண்டு நிறுவனங்களால் பராமரிக்கப் படும் ஆதரவற்ற குழந்தைகள், முதியோர்களுக்கும், உடல் மன வளர்ச்சி குன்றிய மாற்றுத் திறனாளிகளுக்கும் (மெய்ப்புல அறைகூவலர்) நேரில் சென்று, அவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்ய எங்கள் கொண்டாட்டங்களுக்காக ஒதுக்கப் பட்ட தொகையில் பெரும்பகுதியை செலவிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளோம்.(எனவே இப்பதிவை இட அருகதை இருப்பதாகக் கொள்ளலாம்)

இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சியடைந்த எங்கள் மகள், உற்சாகப் படுத்தலுக்காக ஏதேனும் வாங்கித் தரும் உத்தேசத்தில் என்ன வேண்டுமெனக் கேட்க, 3 மாதத்துக்கு முன் சென்ற அரசு மாற்றுத்திறனாளிகள் பள்ளிக் குழந்தைகளுக்கு ஒரு வேளை உணவும், அவர்களை உற்சாகப் படுத்தும் வகையில் ஏதேனும் வாங்கித் தந்தால் போதும் என்று சொன்ன போது ஈன்ற பொழுதினும் பெரு உவப்பாய் இருந்தது உண்மை. பதினோராம் வகுப்புக்காக பள்ளி திறக்கும் முன் அப்பாவும் பெண்ணுமாக கடலூர் சென்று, விடுதியிலிருந்த 25 குழந்தைகளுக்கு மதிய உணவும், திறனறி ஊக்குவிப்பாக படம் வரைந்து வண்ணம் தீட்டி மகிழ வேண்டிய உபகரணங்களும் வழங்கி, நாள் முழுதும் அவர்களுடன் பொழுதைக் கழித்து உற்சாகம் நிரம்ப வீடு திரும்பினர்.

உடல் மன உளைச்சல் நீங்க இறைவனை வேண்டி பிராத்தனை செலுத்துவது காலங்காலமாக நம்மிடையே நிலவிவரும் பழக்கம். என் மாமியார் தன் கண்பார்வைக் குறைவினை சரிசெய்ய அறுவை சிகிச்சை மேற்கொண்டபோது செலுத்திய பிரார்த்தனை என்ன தெரியுமா? பார்வையற்ற, ஊனமுற்ற குழந்தைகள் பள்ளிகளுக்கு தன் சேமிப்பிலிருந்து பெருந்தொகையை நன்கொடையாக அளித்தது தான்! மன நிறைவும் தெய்வ கடாட்சமும் பரிபூரணமாகக் கிடைத்தது!

மாதந்தோறும் நம் உறவினர், நண்பர்கள், அவர்களது குடும்பத்தினர் அல்லது நம் குடும்பத்தினர் பிறந்தநாள், திருமணநாள் வந்து கொண்டுதான் உள்ளன.நேரில் சென்று வாழ்த்தவும் பரிசளிக்கவும் எப்போதும் முடியும் என்று சொல்ல முடியாது. ஒரு போன் செய்து குடும்பத்தோடு அரை மணி(குறைந்த பட்சம்) அரட்டையுடன் முடிப்பதும் உண்டு. இதற்கு மாற்றாய் அவரவர்க்கு அருகாமையிலுள்ள தொண்டு நிறுவனங்களுக்கு இயன்றதொகை அளித்து மகிழலாம். அதற்கும் நேரமற்றவர்கள் அன்றைய பொழுதில் எதிர்ப்படும் எளியோர்க்கோ வயோதிகருக்கோ தன்னாலியன்ற உதவிகளை செய்து அதன் பலனை கொண்டாட்டக்காரருக்கு அர்ப்பணிக்கலாம். இந்த ஜுலை மாதம் எங்கள் மகளோடு, ஜீலையில் பிறந்த உறவுக் குழந்தைகள் பிறந்த நாட்களை முன்னிட்டு இத்தகைய பள்ளிக்குச் சென்று, குழந்தைகளுடன் கொண்டாடினோம். பட்டும் ஆபரணமும் பட்டாசும் ஊர்சுற்றலும் தாண்டிய பிரம்மாண்டமான உற்சாகத்தை, ஊக்கத்தை அளிக்கவல்லதாய் இருந்தது அந்நிகழ்வு.நீத்தார் நினைவு

Tuesday, 13 July 2010 5 கருத்துரைகள்

கைத்தடி சின்ன மகனுக்கு
மூத்த பெண்ணுக்கு மூக்குக் கண்ணாடி
காவியேறி நைந்த வேட்டி ரெண்டும் கேட்பாரற்று
மேல் துண்டு சுருணையானது அடுக்களையில்
போகவர போடும் டெரிலின் சட்டை ரெண்டும்
பெரிய மனசோடு சின்ன தாத்தாவுக்கு
இவ்வளவும் அடக்கி இத்தனை காலமும்
கைத்தடியில் மாட்டிவந்த மஞ்சள் பை
காதறுந்து குப்பைத் தொட்டியில்
வருடங்கள் தேய்த்துக் கடந்த செருப்பும்
தொலைந்தது ஈமச் சடங்கன்று
ஆயிற்று-
தாத்தா செத்துப் பத்தே நாட்கள்!

தானம்

Monday, 12 July 2010 4 கருத்துரைகள்


குச்சி வீடும் காரை வீடும்
மச்சு வீடும் எதிரொலித்தது
நல்ல காலம் பொறக்குது!

குறி சொன்ன வாயும்
குடுகுடுப்பை ஆட்டிய கையும்
அலுத்துப் போன கோடங்கியொருவன்
தளர்வாய்ச் சாய்ந்தான்
ஊர்ப் பொது மரத்தடியில்...

அன்றைய வரும்படி
அரை வயிறு உணவும்
ஐந்தேகால் ரூபாயும் தான்.
இல்லத்தரசிகளின் பெரிய மனசால்
நிரம்பிவழிந்தது தோல்பை
பழந்துணிகளால்...

போடவும் மூடவும் துணிகளற்று
கந்தல் துணியில் விரைத்து அலறும்
தன் பிள்ளைகள் நினைவோடு
எடுத்து உதறிப் பார்க்கிறான்
ஒவ்வொன்றாக...

சாயம் போன
பொத்தான் அறுந்த
காலர் நைந்த
சுருங்கிக் கிழிந்த
துணிகளில் கண்டேன்
மனிதம் சுருங்கி
மங்கிப் போனதை...!

எரியூட்டிய இரவு

Sunday, 11 July 2010 9 கருத்துரைகள்

வீடு முழுக்க சிதறிக் கிடந்த
உறவுக் கூட்டம்.
சொல்லவும் கேட்கவும்
தத்தம் செய்திகளோடு.

யார் யாரோ வந்து என்னென்னவோ பேச்சு...
எனக்கோ
கழுவி விட்ட வீட்டின் தரையாய்
வெறிச் என மனசு.

காதுகளின் வழி புத்தியில் தங்காத குரல்கள்
வீட்டின்
கட்புலன் மீறிய சூனியத்தை நிரப்பவியலாமல்
திறந்து கிடக்கும் வீடு வழியே
வீதி நிறைத்தது.

பேசியே ஆக வேண்டிய கட்டாயம்...
அலை-தொலை பேசிகளின்
ஓயாத விசாரிப்புக்கு.

எல்லோருக்கும் பசி.
நச்சரித்துத் திணித்தனர் எனக்கும்.
நெஞ்சடைத்தது.
மரத்திருந்த நாக்கில் ருசியேயில்லை
குரல்வளை இறுக மூடி, கண்களில் மழை.

சளசளப்பு அருகி
உறக்கப் பிடியில் ஒவ்வொருவராய்...

கனவுகளற்ற தூக்கத்துக்குக்
கடவுளை வேண்டித் திருநீறிட்டு
நான் தூங்கும் வரை தலைவருடும்
அம்மாவின் விரல்களுக்காய்
காத்திருக்கும் எனதுறக்கம்...

கனவில் வருவதற்காய்
காத்திருக்கிறாளம்மா மயானத்தில்...

ஜென் குழந்தைகள்

Wednesday, 16 June 2010 3 கருத்துரைகள்

அரங்கை நிறைத்தது அமைதி
ஜென் தத்துவம் பற்றிய தெளிவுரை
உனக்குள் ஒடுங்கு
மனமற்ற மனம் கொள்
ஒருகை ஓசை உணர்
வெளியேறும் போது
புரிந்தாற்போலொரு உவகை
வீட்டுள் நுழைந்ததும்
வழக்கம் போல
குழந்தைகளுக்குள் பூசல்
ஒருவருக்கொருவர்
சைகையில் சாடினர்
அடங்கு! என
கிளர்ந்த எரிச்சல் தணிந்தது என்னுள்
ஜென் குழந்தைகள்!

சந்தை முடிந்த மறுநாள்

Tuesday, 15 June 2010 4 கருத்துரைகள்

அழுகிய தக்காளிகள், காய்கறித் தோல்கள்,
உரித்தெரிந்த தேங்காய் நார்கள்,
விட்டெறிந்த முற்றல்கள், சொத்தைகள்,
வியாபாரிகளின் பசிதின்ற
பஜ்ஜி, போண்டா மடித்த காகிதக் குப்பைகள்
உடைந்து கிடக்கும் பழமடுக்கிய குழித் தட்டுகள்
ஏலம் போன வாழைப்பழங்களின் வெற்றுத் தார்கள்
கிழங்குகளை போர்த்தி வந்த இலைதழைக் குவியல்கள்
சணல் பிய்ந்து துண்டான கோணிகள்
கரும்புச் சக்கைகள்
கருவாட்டு மிச்சங்கள்
நொறுங்கிக் கிடந்த ஓட்டை வளையல்கள்

நகரின் ஒரு வாரத் தேவைக்கு
விலைபோன காய்கறிகள்
குளிர் சாதன பெட்டிகளில்
சவ்வுத் தாள்களுள் சத்தமின்றிப் பதுங்க
சந்தை முடிந்த மறுநாள்
மிச்சம்மீதி எச்சங்களை
கூட்டிப் பெருக்கிக் கொளுத்துகிற
துப்புறவாளனின் பசியாற்றுவதென்னவோ
பழங்கஞ்சியும் உப்பு நாரத்தையும் தான்!

பறத்தல்-பறத்தல் நிமித்தம்

1 கருத்துரைகள்

எழுந்தவுடன் பெருக்கி
ஈரத்துணியால் தரை துடைத்து
தெருவடைத்துக் கோலமிட்டு
துவக்கி வைத்தாள் அம்மா காலைப் பொழுதை

தேய்த்து தேய்த்து துடைத்த
தன் காலணிகள் பளபளப்பை
தள்ளி நின்று ரசித்திருந்தார்
இராணுவத்திலிருந்து மீண்டிருந்த அப்பா.

காற்றடித்து எண்ணெய் போட்டு
முன்னும் பின்னுமாக மாய்ந்து மாய்ந்து
துடைத்து வைத்த வாகனம்
காத்திருக்கு வெளிக்கிளம்ப
இவ்வீட்டு வாண்டுப் பையனோடு

கல்லூரிப் பேருந்து
தெருமுனை திரும்பும் வரை
கண்ணாடியே கதியாக
நெளிந்து வளைந்து சீவிக் கலைத்து
ஒப்பனைகள் பலசெய்து
கற்பனையில் மிதந்திருப்பான் பெரியவன்

எட்டாச்சு ஒன்பதாச்சு எல்லாரும் போயாச்சு
பத்தோடும் அழுக்கோடும்
அம்மா மல்லுக்கட்டி நிற்க

திறந்தவுடன் பறந்துவிடும்
எத்தனிப்பில்
சிறகுகளைக் கோதிக்கொண்டிருக்கின்றன
கூண்டுக் கதவருகில் குருவிகள்...

உங்கள் மின்னஞ்சல் முகவரி...

Popular Posts

எங்க ஏரியா.. உள்ள வாங்க!!!

 
பறத்தல்- பறத்தல் நிமித்தம் © 2011 - Designed by Sibhi Kumar